×

தொடர் விடுமுறை எதிரொலி மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய ‘வைகை அணை’

ஆண்டிபட்டி, ஏப். 10: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்த வைகை அணை பூங்கா பகுதிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை போன்ற வெளிமாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் வலது கரை பூங்கா மற்றும் இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை இரண்டு பூங்காவை பிரிப்பதற்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்து அணையின் மதகுபகுதியை நேருக்கு நேராக பார்க்கும் காட்சி இங்கு அமைந்துள்ளது.

சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, பையில்வான் பார்க், காந்தி பார்க், யானை சறுக்கல், ஆங்காங்கே நீருற்று, புல் தரைகள், ஓய்வெடுக்கும் இருக்கைகள், வைகை உல்லாச ரயில், இசை நடன நீருற்று, படகு குழாம் உள்ளிட்ட ஏராளாமான சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை பூங்காவில் நுழைவதற்கு 5 ரூபாய் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் இன்று வைகை அணை பூங்கா பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வலது கரை, இடது கரை என இரண்டு பூங்காக்களிலும் சுற்றுலா வருகை அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள உல்லாச ரயில் பெரியவருக்கு ரூ 6ம், சிறியவர்க்கு ரூ3ம், வசூலிக்கப்படுகிறது. இதனால் ரயிலில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக உல்லாச ரயில் இயங்காமலும், இசை நடன நீருற்று செயல்படாமலும், படகு குழாம் நடைமுறைக்கு வராமலும் இருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் செயல்பட்டு கொண்டிருப்பதால் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி மக்கள் வெள்ளத்தால் நிரம்பிய ‘வைகை அணை’ appeared first on Dinakaran.

Tags : Vaikai Dam ,Antipatti ,Theni District, Vaigai Dam Park ,Andipatti ,Vaikai ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...